பாட்னா:
பீகார் மாநிலத்தின் சிறுபான்மை துறை மந்திரி குர்ஷித் ஆலம், ரூபாய் 10 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல் மந்திரியாக சுஷில்குமாரும் பதவி வகித்து வருகின்றனர்.
பீகாரில் சிறுபான்மை துறை மற்றும் கரும்புநல வாரிய மேபாட்டு துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் குர்ஷித் ஆலம். இவர் நேற்று பாட்னா போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியதாவது:
சிறுபான்மை இனத்தவரின் நலங்களுக்காக கடந்த சில தினங்களுக்காக மாநிலம் முழுவதும் பயணம் செய்து வருகிறேன். இந்நிலையில், எனது மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், என்னிடம் 10 லட்சம் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
குர்ஷித் ஆலமிடம் புகாரை பெற்ற போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த 10-ம் தேதி ஒரு லட்சம் கேட்டு மிரட்டல் வந்ததாக புருஷோத்தம்பூர் காவல் நிலையத்தில் இவர் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.