செய்திகள்

பீகார் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியம்: கட்டிட தொழிலாளிக்கு ரூ.13 லட்சம் மின் கட்டணம்

பீகார் மாநிலத்தின் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால், கட்டிட தொழிலாளிக்கு 13 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

பீகார் மாநிலம் சம்ஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார். கட்டிட தொழிலாளியான இவரது வீட்டில் 4 எல்.இ.டி பல்புகள், டி.வி. மற்றும் ஒரு மின்விசிறி மட்டுமே உண்டு. ஒண்டு குடித்தனத்தில் வசித்து வரும் இவருக்கு, கடந்த மாதம் 12.81 லடசம் ரூபாய்க்கு மின் கட்டணம் வந்துள்ளது. இதைக்கண்ட அவர் மயங்கி விழாத குறைதான். உடனடியாக அந்த பில்லை எடுத்துக் கொண்டு மதுராப்பூர் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று விசாரித்தார்.

அங்கிருந்த அதிகாரிகள், அவரது மின் கட்டணத்தை சோதனை செய்தபோது, மின்சார மீட்டரில் பழுது ஏற்பட்டது தெரியவந்தது.
இதைதொடர்ந்து, அவருக்கு மின் கட்டணத்தை திருத்தி அமைத்தனர். அதன்படி, அவர், 2 ஆயிரத்து 992 ரூபாய் கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மனோஜ்குமார் கூறுகையில், ‘’கடந்த ஜனவரியில் ஒரு ஆயிரத்து 335 ரூபாய் மின் கட்டணம் செலுத்தினேன். ஆனால் அதற்கு பிறகு மின் கணக்கீட்டாளர் வந்து மின் அளவை கணக்கெடுத்தபோது 1.74 லட்சம் ரூபாய்க்கு பில் வந்தது. அப்போதே மதுராப்பூர் மின் வாரியத்துக்கு சென்று புகார் தெரிவித்தேன். ஆனாலும் அவர்கள் மின் மீட்டரை சரிசெய்யவில்லை. அதன் தொடர்ச்சியாகவே, இந்த முறை 12.81 லட்சம் ரூபாய்க்கு பில் வந்துள்ளது என நினைக்கிறேன். பில்லை கண்டதும் எனக்கு மயக்கம் வராத குறைதான்’’ என அதிர்ச்சியுடன் தெரிவித்தார்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ’’மனோஜ்குமார் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மீட்டரில் பழுது ஏற்பட்டுள்ளது. அதனால் தான் மிக அதிக அளவாக 86 ஆயிரத்து 780 யூனிட் ஓடியதாக காட்டியுள்ளது. அதற்கான கட்டணமாக 12,81 லட்சம் ரூபாய்க்கு பில் வந்துள்ளது. இதில் அலட்சியமாக செயல்பட்ட மின் கணக்கீட்டாளருக்கு இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவுள்ளோம். அவர் கடந்த முறை செலுத்திய 2 ஆயிரத்து 992 ரூபாய்க்கு மின்கட்டணம் திருத்தப்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.