செய்திகள்

துப்பாக்கி முனையில் திருமணம்: கண்ணீருடன் தாலி கட்டிய மணமகன் - பீகாரில் விநோதம்

பீகாரில் துப்பாக்கி முனையில் வாலிபரை மணப்பெண்ணிற்கு கட்டாயமாக தாலி கட்ட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா:

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள போகாரா இரும்பு நிறுவனத்தில் சீனியர் மேனஜராக வேலைப்பார்த்து வருபவர் வினோத் குமார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஹதியா-பாட்னா விரைவு ரெயிலில் சென்றுள்ளார். திருமணம் முடிந்த பிறகும் வினோத் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையில் வினோத்தின் சகோதரர் சஞ்சய்க்கு அடையாளம் தெரியாத நபர் போன் செய்து வினோத்திற்கு கட்டாய திருமணம் நடந்ததாக கூறினார். இதனால் சந்தேகமடைந்த வினோத்தின் சகோதரர் சஞ்சய் குமார் போலீசில் புகார் அளித்தார்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் வினோத்திற்கு நடந்த கொடுமை தெரியவந்துள்ளது. வினோத்தை பண்டாரக் பகுதியைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்று ஒரு பெண்ணிற்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். வினோத் திருமணத்திற்கு மறுத்த போது அவரை அடித்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பெண்ணிற்கு தாலி கட்ட வைத்துள்ளனர். வினோத் கண்ணீர் மல்க தாலி கட்டிய புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன. இது குறித்து தெரிந்ததும் சஞ்சய் குமார் உள்ளூர் போலீசின் உதவியுடன் வினோத்தை மீட்டு அழைத்து வந்தார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அந்த பெண்ணை ஏற்றுக்கொள்ளுமாறு வினோத்தின் குடும்பத்திற்கு மிரட்டல்கள் வந்துள்ளன. இதுகுறித்து வினோத் போலீசாரிடம் புகார் அளித்தார். தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை விடுத்தார். வினோத் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். #tamilnews

SCROLL FOR NEXT