பீகார் தம்பதி சொந்தம் கொண்டாடும் இளம் பெண் கீதா. 
செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து இந்தியா தப்பி வந்த கீதாவை சொந்தம் கொண்டாடும் தம்பதி

பாகிஸ்தானில் இருந்து இந்தியா தப்பி வந்த கீதாவை பீகாரைச் சேர்ந்த தம்பதி உரிமை கோரி இருப்பது திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கீதா. வாய் பேச முடியாத இளம் பெண்ணான இவருக்கு தற்போது 23 வயது ஆகிறது.

கீதா 15 ஆண்டுகளுக்கு முன்பு 8 வயது சிறுமியாக இருந்த போது பாகிஸ்தான் செல்லும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தவறுதலாக ஏறிச் சென்றுவிட்டார்.

அந்த ரெயில் லாகூர் சென்றடைந்ததும் கீதா மட்டும் எங்கு செல்வது என்று தெரியாமல் தனியாக ரெயிலில் அமர்ந்து இருந்தார். பாகிஸ்தான் போலீசார் அவரை மீட்டு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கீதாவுக்கு வாய் பேச முடியாது என்பதாலும் படிப்பறிவு இல்லாததாலும் ஊர் மற்றும் பெற்றோர் விவரங்களை தெரிவிக்க முடியவில்லை.

கராச்சியை சேர்ந்த பில்குயீஸ் என்பவர் கீதாவை தத்து எடுத்து வளர்த்து வந்தார். அவரது பூர்வீகம் இந்தியா என்பதை தெரிந்து கொண்ட அவர் இந்திய தூதரகம் மூலம் பெற்றோரை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதற்கிடையே கீதாவின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் செய்து அரியானா உள்பட பல மாநிலங்களில் தேடி வந்தனர். பெற்றோரின் படத்தையும், சிறுமியின் படத்தையும் போலீசார் வெளியிட்டனர். பெற்றோர் படத்தை இந்திய தூதரகம் மூலம் பெற்ற கீதா அவர்களை அடையாளம் கண்டார்.

இதற்கிடையே பாகிஸ்தானில் வளர்ந்த பெரிய பெண்ணான கீதாவை இந்தியாவுக்கு அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைக்க வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை எடுத்தார். கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந்தேதி கீதா விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.

டெல்லி விமான நிலையத்தில் மகளை தந்தை ஜனார்த்தனன் மகாதோ, வளர்ப்பு தாய் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றார்கள். பின்னர் கீதா பெற்றோருடன் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து நன்றி தெரிவித்தார். கீதாவின் பெற்றோருக்கு சுஷ்மா சுவராஜ் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

இந்த நிலையில் பீகார் மாநிலம் அலிநகர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராம்ஸ்வரூப் சவுத்திரி- சிந்தாதேவி தம்பதி கீதாவை தங்களது மகள் என்று சொந்தம் கொண்டாடியுள்ளது. அவர்கள் கூறியதாவது:-

அரியானா மாநிலம் கர்ணாலில் இருந்து ரெயிலில் ஊருக்கு புறப்பட்ட போது கீதா காணாமல் போய்விட்டாள். அவளது பெயர் அப்போது பூஜா, பல வருடங்கள் ஆகியும் மகள் கிடைக்காததால் வேதனை அடைந்தோம். தற்போது கீதா என்ற பெயரில் இந்தியா திரும்பி இருக்கிறார்.

நாங்கள் அவளை டி.வி.யில் பார்த்த போது எங்கள் மகள் பூஜாதான் என்று உறுதியாக தெரிய வந்தது. கீதா எங்களைப் பார்த்தால் அடையாளம் கண்டு கொள்வாள். கீதாவின் தலையில் மச்சமும், வெட்டு தழும்பும் காணப்படும். பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட கீதாவை டி.வி.யில் பார்த்து விட்டு இவள்தான் பூஜா என்று அடையாளம் காட்டினார்கள்.

இவ்வாறு தெரிவித்தனர்.

கீதாவுக்கு சொந்தம் கொண்டாடும் தம்பதி கூலி வேலை செய்து வரும் தொழிலாளர்கள் ஆவார்கள். அவர்கள் கீதாவுக்கு உரிமை கோரி இருப்பது திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.