இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற 11-வது லீக் போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சிட்னி அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 41 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். ஷேன் வாட்சன் 41 ரன்களும், கல்லம் பெர்கியூசன் 24 ரன்களும் எடுத்தனர். சிட்னி தண்டர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. ஹோபார்ட் அணி தரப்பில் கிலைவ் ரோஸ் 2 விக்கெட்களும், ஜொப்ரா ஆர்சர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அலெக்ஸ் டூலம் 34 ரன்களிலும், டார்கி ஷார்ட் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் ரன் எடுக்க தவறிதோடு சீரான இடைவேளியில் ஆட்டமிழந்தனர். ஹோபார்ட் அணி 19.3 ஓவர்களில் 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சிட்னி தண்டர் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சிட்னி அணி பந்துவீச்சில் கிறிஸ் கிரீன், குரிந்தர் சந்து, மிச்செல் மெக்லெனகன், அர்ஜின் நாயர், பவாத் அஹ்மத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.
சிட்னி அணியின் ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் சிட்னி தண்டர் அணி புள்ளிப்பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. நாளை நடைபெறும் லீக் போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
#BigBashLeague #SydneyThunder #HobartHurricanes