செய்திகள்

பிக் பாஷ் கிரிக்கெட்: சிட்னி தண்டர் அணியை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வெற்றி பெற்றது. #BBL07 #SydneyThunder #MelbourneRenegades

மாலை மலர்

பிரிஸ்பேன்:

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் டிசம்பர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று கேன்பெராவில் நடைபெற்ற லீக் போட்டியில் சிட்னி தண்டர் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. 

டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. மெல்போர்ன் அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் ஹாரிஸ் அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார். மேத்தீவ் ஷார்ட் 28 ரன்களும், கெய்ரான் பொலார்ட் 23 ரன்களும் எடுத்தனர். சிட்னி அணி பந்துவீச்சில் குரிந்தர் சந்து 2 விக்கெட்களும், கிறிஸ் கிரீன், மிச்செல் மெக்லினகன், பவாத் அஹ்மத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதைத்தொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் அணி களமிறங்கியது. சிட்னி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸ் 1 ரன்னிலும், கர்டிஸ் பாட்டர்சன் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ஷேன் வாட்சனுடன், ஜெய் லெண்டன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நேரம் தாக்குபிடித்து விளையாடியது. வாட்சன் 22 ரன்களிலும், லெண்டன் 23 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

அவர்களை தொடர்ந்து அர்ஜுன் நாயர் - பென் ரோரர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டது. அர்ஜுன் நாயர் 45 ரன்களும், பென் ரோரர் 48 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது சிட்னி அணி 15 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் களமிறங்கிய கிறிஸ் கிரீன் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

சிட்னி அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெல்போர்ன் அணி பந்துவீச்சில் கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்களும், கிறிஸ் ட்ரினெய்ன், கெய்ரான் பொலார்ட் தலா 32 விக்கெட்களும், ஜாக் வில்டர்மத், ஜான் ஹாலண்ட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இன்றைய போட்டியின் முடிவில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி எட்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. சிட்னி தண்டர் அணி, தொடர்ந்து 8 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. நாளை நடைபெறும் லீக் போட்டியில்  - பெர்த் ஸ்கார்சர்ஸ் - அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #BBL07 #SydneyThunder #MelbourneRenegades