செய்திகள்

பிக் பாஷ் கிரிக்கெட்: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தி மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வெற்றி பெற்றது. #BBL07 #MelbourneStars #MelbourneRenegades

மாலை மலர்

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் லூக் ரைட், பென் டங் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரைட் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கெவின் பீட்டர்சன் - டங்-உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ரன் குவித்தது. பீட்டர்சன் 30 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து டங், 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.  

இறுதியாக கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாயின்ஸ் ஜோடி சேர்ந்து ரன்குவித்தனர். மேக்ஸ்வெல் 33 ரன்கள் எடுத்து இன்னிங்சின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்டாயின்ஸ் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது. ரெனிகேட்ஸ் அணியில் மொகமது நபி, கேன் ரிச்சர்ட்சன், வெய்ன் பிராவோ, ஜாக் வில்டர்மத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மார்கஸ் ஸ்டாயின்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் பிஞ்ச்-உடன், கெமரான் ஒயிட் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் ஒயிட் நிதானமாக விளையாட மறுமுனையில் பிஞ்ச் அதிரடியில் இறங்கினார். பிஞ்ச் 22 பந்தில் 43 ரன்கள் ( 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் ) எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஒயிட்-உடன், மொகமது நபி இணைந்தார். நபியும் அதிரடியாக விளையாடினார்.

அரைசதம் அடித்த நபி, 30 பந்துகளில் 52 ரன்கள் (2 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டார்ஸ் அணி பந்துவீச்சில் ஜான் ஹஸ்டிங்ஸ் 2 விக்கெட்களும், ஜாக்சன் கோல்மன், ஆடம் சாம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் மொகமது நபி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் எட்டு புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் சிட்னி தண்டர் - அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.