செய்திகள்

டோக்லாம் விவகாரம்: சீன தூதரக அதிகாரியின் ஊடக தகவலை நிராகரித்தது பூடான்

சிக்கிம் எல்லையில் உள்ள டோக்லாம் உரிமை தொடர்பாக பூடான் தெரிவித்ததாக சீன தூதரக அதிகாரி வெளியிட்ட தகவல்களை பூடான் நிராகரித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து உள்ளன. இந்திய படைகளை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தி வரும் சீனா, அங்கு போர் தொடுக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டி வருகிறது. இதனால் சிக்கிம் எல்லையில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது.

ஆனால் அண்டை நாடுகள் அளிக்கும் எவ்வித சவாலையும் சந்திக்க போதுமான வலிமை இந்திய படைகளுக்கு இருப்பதாக ராணுவ மந்திரி அருண் ஜெட்லி மீண்டும் உறுதிபட தெரிவித்துவிட்டார். தொடர்ச்சியாக சீனா மிரட்டல் விடுக்கும் வகையில் அறிக்கையை விடுத்து வருகிறது.

இந்நிலையில் பிரச்சனை எழுந்து உள்ள பகுதியான டோக்லாம் பூடானுக்கு சொந்தமானது கிடையாது என பூடான், சீனாவிடம் கூறியிருப்பதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. சீன தூதரக அதிகாரி வாங் வென்லி, சீனா சென்று உள்ள இந்திய ஊடகக் குழுக்களிடம் இதனை தெரிவித்து உள்ளார். ஆனால், சரியான ஆவணங்களை வழங்கவில்லை. இத்தகவலை இப்போது பூடான் மறுத்து உள்ளது.

“டோக்லாமில் எல்லை விவகாரத்தில் எங்களுடைய நிலைப்பாடானது மிகவும் தெளிவானது. பூடான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த ஜூன் 29ம் தேதி இதுதொடர்பாக தெளிவான அறிக்கையை தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது,” என பூடான் அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளது.

‘பூடான் பகுதியில் சீன ராணுவம் சாலை பணிகளை மேற்கொள்வது என்பது இருநாடுகள் இடையிலான ஒப்பந்தத்தை மீறுவதாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளை வரையறுக்கும் செயல்முறையை பாதிக்கிறது’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.