சென்னை:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.
இதுதவிர வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. மேலும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 15 ஆண்டுகளாக போகி பண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரசாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த வருடங்களில் பழைய ரப்பர், பிளாஸ்டிக் போன்றவை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி கல்வித்துறையின் மூலம் புகை மாசு பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போகி பண்டிகையின் போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று மாசை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகி பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளில் 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றின் தரத்தை கண்காணிக்க காற்று மாதிரியை சேகரித்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.
போகி பண்டிகையின்போது ஏற்படும் காற்று மாசினை தடுக்கும் விழிப்புணர்வு பிரசார தொடக்க விழா நேற்று சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் மாநில அளவில் ஓசோன் படலம் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 10 பசுமைப்படை மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பரிசுகள் வழங்கினார். மேலும் போகி உறுதிமொழி வாசித்து விழிப்புணர்வு பிரசார வாகனங்களையும் அமைச்சர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews