செய்திகள்

பய்யூ மஹராஜ் உடல் தகனம் முடிந்தது- சிதைக்கு மகள் தீ மூட்டினார்

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல ஆன்மிக தலைவர் பய்யூ மஹராஜின் உடல் இன்று இந்தூர் நகரில் தகனம் செய்யப்பட்டது. #BhayyuMaharajsuicide #SpritualguruBhayyuMaharaj

மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் சமூகச் சேவைகளில் ஈடுபட்டுவந்த பிரபல ஆன்மிக தலைவர் பய்யூ மஹராஜ். உதய் சிங் தேஷ்முக் என்னும் இயற்பெயரை கொண்ட இவருக்கு மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூர் நகரில் மிகப்பெரிய ஆசிரமம் உள்ளது.

மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பய்யூ மஹராஜின் சீடர்களாக உள்ளனர். இதுதவிர பல லட்சக்கணக்கானவர்களின் ஆன்மிக குருவாக இருந்த இவர், நேற்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு ஆபத்தான நிலையில் இந்தூரில் உள்ள பாம்பே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த செய்தி பரவியதும் ஆஸ்பத்திரியின் முன்னர் அவரது சீடர்கள் பலர் திரண்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பய்யூ மஹராஜ் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்ததும் அவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

அவரது மறைவுக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் செய்தி வெளியிட்டனர். இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பய்யூ மஹராஜின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தூரில் உள்ள அவரது ‘சூர்யோதய்’ ஆசிரமத்தில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, மகாராஷ்டிரா மந்திரி பங்கஜா முண்டே மற்றும் மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.