செய்திகள்

மூன்றாம் பாலினத்திற்கு தொடரும் புறக்கணிப்பு: சித்த மருத்துவராகவும் தாரிகா பானுவின் கனவு நனவாகுமா?

மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற முதல் திருநங்கை தாரிகா பானு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை இழந்த நிலையில் தற்போது சித்த மருத்துவ படிப்புக்காக விண்ணப்பித்துள்ளார்.

மாலை மலர்

மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற முதல் திருநங்கை தாரிகா பானு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை இழந்த நிலையில் தற்போது சித்த மருத்துவ படிப்புக்காக விண்ணப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓலக்குடி கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை தாரிகா பானு, அங்குள்ள சவலப்பேரி பகுதியில் இயங்கி வரும் மேல்நிலைப் பள்ளியில் 2014-ஆம் ஆண்டு 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

பின்னர், திருவள்ளூர் மாவட்டதில் குடியேறிய தாரிகா தனது பள்ளிக் கல்வியை தொடர்வதற்காக பல பள்ளிகளில் அனுமதி கேட்டார். ஆனால் அவர் திருநங்கை என்பதால் பல பள்ளிகள் அவரை சேர்க்க மறுத்துள்ளது. மற்றொரு
திருநங்கை நல ஆர்வலரான கிரேஸ் பானு, தாரிகாவை மகளாக தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இருவரது பல போராட்டங்களுக்கு பிறகு அம்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பில் சேர தாரிகாபானுவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனுமதி வழங்கினார். இதைதொடர்ந்து பனிரெண்டாம் வகுப்பு
படித்து வந்த தாரிக்கா பானு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தினார்.

ஒரு திருநங்கையாக மருத்துவம் படிக்க வேண்டும், மருத்துவ துறையில் சாதிக்க வேண்டும் என்பதே தனது கனவு என்று கூறியிருந்த தாரிகா பானுவுக்கு நீட் தேர்வு உள்ளிட்ட சில சிக்கல்களால் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குரிய வாய்ப்பு கை நழுவிப்போனது.

இருப்பினும், இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்தா மருத்துவத்திலாவது, தேர்ச்சி பெற வேண்டும் என அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதையடுத்து, தனது வளர்ப்புத் தாயான கிரேஸ் பானு உடன் சென்னையில் உள்ள இந்திய மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்வி இயக்ககத்தில் சித்த மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப படிவத்தை பெற்றார்.

விண்ணப்பத்தில் பெயர் வயது விபரங்களை பூர்த்தி செய்த பின்னர், பாலின அடையாளத்தை குறிப்பிடும் இடத்தில் ஆண் - பெண் என்ற இரு தேர்வுகள் மட்டுமே இருந்ததைக் கண்டு இருவரும் அதிர்ச்சியடைந்தனர். சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய உத்தரவின் படி மூன்றாம் பாலினத்திற்கான எவ்வித விருப்பத் தேர்வும் அந்த படிவத்தில் காணப்படவில்லை.

இதுதொடர்பாக, இந்திய மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது மவுனமே பதிலாக வந்தது. இதையடுத்து, சித்த மருத்துவராகவும் தனது கனவு நனவாகுமா? என்னும் புரிபடாத திரிசங்கு நிலையில் தாரிகா பானுவும் அவரது வளர்ப்புத் தாயான கிரேஸ் பானுவும் இருந்து வருகிறார்கள்.

இவர்கள் மட்டுமா..? அரசாங்கங்கள் எத்தனை சட்டங்களை இயற்றினாலும், நாட்டின் தலைமை நீதிமன்றம் எத்தனை உத்தரவுகளை பிறப்பித்தாலும், அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராக - கிணற்றில் போட்ட கல்லாக - ஏட்டுச்
சுரைக்காயாக மட்டுமே இருக்க முடியும்.

அதனால், தாரிகா பானு மட்டுமல்ல இவரைப்போல் முன்னேறத்துடிக்கும் அத்தனை திருநங்கை வாழ்வும் திரிசங்கு சொர்க்கமாகவும், நிரந்தரமில்லாத இருண்ட எதிர்காலமாகவும்தான் இருக்கும் என்ற நிலை என்று மாறுமோ..?