செய்திகள்

பெங்களூரு ரிசாட்டில் இருந்து குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டனர்

பா.ஜ.க. மிரட்டுவதாக கூறி பெங்களூரு ஈகிள்டன் ரிசாட்டில் தங்கி இருந்த குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

மாலை மலர்

பெங்களூரு:

குஜராத் மாநிலத்தில் வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி 3 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் அதிரடியாக ராஜினாமா செய்து பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டனர்.

மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் அமித்ஷா, ஸ்மிரிதி ரானி மற்றும் காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்த பல்வந்த்சிங் ராஜ்புட் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் ஆலோசகர் அகமது பட்டேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமித்ஷ் மற்றும் ஸ்மிரிதி ரானி வெற்றி பெறுவதற்கான சீட்டுகள் ஆளும் பா.ஜ.கவிடம் உள்ளது. அதேபோல், அகமது பட்டேலுக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் உள்ளது. இதனால், தனது வேட்பாளரை வெற்றி பெற செய்ய காங்கிரஸ் கட்சியில் இருந்த மேலும் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கவும், தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கவும் பா.ஜ.க. முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம்ச்சாட்டப்பட்டது.

இதனையடுத்து, குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் அதிரடியாக பெங்களூர் கொண்டு வரப்பட்டு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்பாடு செய்ய கர்நாடக மின்சாரத் துறை மந்திரி சிவக்குமார் மற்றும் அவரது சகோதரர் நியமிக்கப்பட்டனர்.

இதனிடையே, பெங்களூரு ரிசார்ட் மற்றும் மந்திரி சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 4-வது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பா.ஜ.க. அரசு தனது சொந்த காரியத்திற்காக வருமான வரித்துறையை பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம்ச்சாட்டியது. 

இந்நிலையில், பா.ஜ.க. மிரட்டுவதாக கூறி பெங்களூரு ஈகிள்டன் ரிசாட்டில் தங்கி இருந்த குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர். வருமான வரித் துறை சோதனையை அடுத்து எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இருப்பினும், வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி 3 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிகிறது.