சென்னை:
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. இதனால் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடலின் நடுப்பகுதியில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு அல்லது வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது.
அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (13-ந்தேதி) தென் தமிழகத்தின் பெரும் பாலான இடங்களில் கனமழை பெய்யும். வட தமிழகத்தில் உள்பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அடுத்த 48 மணி நேரத்தில் குமரி கடல் பகுதி மற்றும் கேரளா தெற்கு கடலோர பகுதி, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபி கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது.
இதனால் மேற்கண்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அடுத்து வர இருக்கும் புயலுக்கு ‘சாகர்’ என்று பெயரிடப்பட உள்ளது. புயலுக்கு பெயர் வைக்கும் முறை அமலுக்கு வந்த பிறகு இது 50-வது புயலாகும்.
ஆஸ்திரேலியர்கள்தான் புயலுக்கு பெயர் வைக்கும் பழக்கத்தை முதன் முதலில் ஏற்படுத்தினர்.
காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் இன்று காலை முதல் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. காலை 8 மணி முதல் 2 மணி நேரத்திற்கும் மேலாக ராமேசுவரத்தில் மிதமான மழை பெய்தது.
கடலும் கொந்தளிப்பாக காணப்பட்டதால் மீனவர்கள் இன்றும் மீன்பிடிக்க செல்லவில்லை. எப்போதும் அமைதியாக காணப்படும் அக்னி தீர்த்த கடலில் சூறாவளி காரணமாக அலைகள் எழுந்தது.