கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு புனித தலத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்த தகவல் வைரலாகப் பரவியதையடுத்து, பஷிர்காத் பகுதியில் மதக்கலவரம் ஏற்பட்டது. இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கிக் கொண்டதால் அப்பகுதி போர்க்களமாக மாறி, அருகில் உள்ள பகுதிகளுக்கும் கலவரம் பரவியது. கலவரத்தை அடக்க எல்லைப் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை மோசமாக உள்ளதால் அரசை கலைக்க வேண்டும் என வற்புறுத்தி வந்தன. ஆனால், மம்தா எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடந்தது மதமோதல் அல்ல, மக்களுக்கு எதிரான கலவரம் என பா.ஜ.க. எம்.பி. பாபுல் சுப்ரியோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிடுகையில், “இது சிறுபான்மையினர் மற்றும் பெரும்பான்மையினர் இடையே நடைபெற்ற மதமோதல் அல்ல. கலவரக்காரர்கள், குண்டர்கள், ரவுடிகள் சேர்ந்து மக்களுக்கு எதிராக செய்த கலவரம். இதற்கான கண்ட்ரோல் ரூம் மம்தாவிடம் ஏன் இருக்கக் கூடாது?
கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாநிலத்தில் கலவர தீயை தூண்டும் வகையில் மம்தா செயல்பட்டு வருகிறார்.
பஷிர்காத் பகுதியில் கைப்பற்றிய பணம் குறித்து மம்தா வாய் திறக்கவில்லை. இதிலிருந்தே அவர் ஓட்டு வங்கியை குறிவைத்து செயல்பட்டு வருவது தெரிகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.