செய்திகள்

சமூக வலைத்தளத்தில் போலி செய்தி: மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவரை கைது செய்தது போலீஸ்

மேற்கு வங்கத்தில் மதக் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் போலியான தகவல்களை வெளியிட்ட பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்னாஸ் மாவட்டத்தில் பதூரியா என்ற பகுதியில் கடந்த 3-ம் தேதி மாலை திடீரென இரு மதத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. முகநூலில் வெளியிட்ட ஆட்சேபனைக்குரிய கருத்து ஒன்று வெளியானதால் இந்த கலவரம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஆங்காங்கே கடையடைப்பு மற்றும் தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. கலவரத்தை கட்டுப்படுத்த மாநில போலீசாருக்கு உதவியாக துணை ராணுவம் குவிக்கப்பட்டது.

இதற்கிடையே பதூரியா மத கலவரத்தின்போது நடந்த சம்பவம் என பல்வேறு வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பாரதீய ஜனதாவை சாடினார். மாநிலத்தில் மதவாத விரோதத்தை ஏற்படுத்த சமூக வலைதளங்களில் பாரதீய ஜனதா மிகவும் ஆட்சேபிக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது என குற்றம் சாட்டினார். இவர்களை மேற்கு வங்காள மாநில மக்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள். நாங்கள் பேஸ்புக்கிற்கு மதிப்பளிக்கிறோம், ஆனால் பேக்புக்கிற்கு மதிப்பளிக்க மாட்டோம் என்றார் மம்தா பானர்ஜி.

இதற்கிடையே மேற்கு வங்காள மாநிலத்திற்கு அவதூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டார். மோதலை தூண்டக்கூடிய வீடியோக்கள், புகைப்படங்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது என மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் மேற்கு வங்காள மாநில பாரதீய ஜனதாவின் ஐடி பிரிவு செயலாளர் தருண் சென்குப்தாவை மாநில சிஐடி போலீஸ் கைது செய்து உள்ளது. மத பதற்றத்தை அதிகரிக்க செய்யும் விதமாக போலியான வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இதற்கு மாநில பாரதீய ஜனதா பொதுச்செயலாளர் சயான்தான் பாசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார், நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

கடந்த சில நாட்களில் கைது செய்யப்படும் மூன்றாவது நபர் இவராவார். சமீபத்தில் சோனார்பூரில் இருந்து ஒருவரை போலீஸ் கைது செய்தது. பெண் ஒருவருக்கு ஆண்கள் பாலியல் தொல்லைக் கொடுக்கும் போஜ்பூரி பட காட்சியை அவர் வெளியிட்டு உள்ளார். இது சமீபத்தில் மத கலவரம் வெடித்த பசிர்கட்டில் நடந்தது என அதிகமான பா.ஜனதா தலைவர்களால் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT