செய்திகள்

பனாரஸ் பல்கலைக்கழக வன்முறை: நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது

மாலை மலர்

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் சில மர்மநபர்கள் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதில் நடவடிக்கை எடுக்காத பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் ஏராளமான மாணவ-மாணவிகள் உள்பட பலர் காயம் அடைந்தனர்.

வன்முறை தொடர்பாக மாணவர்கள் மற்றும் போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தடியடியை கண்டித்து எதிர்க்கட்சிகள் பா.ஜனதா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த பிரச்சினையை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும்படி மாநில அரசுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடந்தது.

கூட்ட முடிவில் மாநில மந்திரி ஸ்ரீகாந்த் சர்மா கூறும்போது, “இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.