செய்திகள்

ரூ.30 லட்சத்துக்கு மேல் வாங்கும் சொத்துக்கள் கண்காணிக்கப்படும்: மத்திய அரசு நடவடிக்கை

ரூ.30 லட்சத்துக்கு மேல் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது குறித்து பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் சோதனை செய்ய உள்ளோம் என்று மத்திய நேரடி வரி ஆணைய தலைவர் சுஷில் சந்த்ரா தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நேரடி வரி ஆணைய தலைவர் சுஷில் சந்த்ரா கூறியதாவது:-

கணக்கில் வராத பணத்தை பரிவர்த்தனை செய்வதற்காக போலியாக தொடங்கப்பட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் இந்த நிறுவனங்கள் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் செய்த பண பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. மேலும் நிறுவனங்களின் 621 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

பினாமி பரிவர்த்தனை சட்டத்தின்படி ரூ.1800 கோடி சொத்து குறித்து விசாரிக்கிறோம்.

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற உதவும் வழிமுறைகளை கண்டுபிடித்து அழித்து வருகிறோம். இதன் மூலம் போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வருமான வரி தாக்கல் செய்பவர்களின் விவரங்களில் ரூ.30 லட்சத்துக்கு மேல் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது குறித்து சோதனை செய்ய உள்ளோம்.

அவர்களின் வரி தாக்கலில் சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனை மற்றும் விவரங்கள் பொருந்தவில்லை என்றால் பினாமி சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பினாமி சொத்து வழக்குகளில் மிக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவுக்கு அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள்.

வரி நடவடிக்கைகளை மேம்படுத்துவது மற்றும் பினாமி தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் 27 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பிலிருந்தும் விவரங்கள் கிடைத்து வருகின்றன.

சமீபத்தில் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பரிவர்த்தனைகளை வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த நிறுவனங்கள், பினாமி சொத்துக்களை கையாண்டது அல்லது பிற நிதி பரிவர்த்தனைகளை செய்தது வரித்துறை விவரங்களுடன் பொருந்தவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.