புதுடெல்லி:
பெல்ஜியம் நாட்டின் மன்னர் பிலிப் மற்றும் ராணி மதில்டே தம்பதியினர் ஏழு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தனர்.
பெல்ஜியம் நாட்டு மன்னர் பிலிப் மற்றும் ராணி மதில்டே தம்பதியினர் ஏழு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளனர். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் விதமாக மன்னரின் பயணம் அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை டெல்லி வந்தடைந்த பெல்ஜியம் மன்னர் தம்பதியருக்கு மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி மற்றும் பெல்ஜிய தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இந்தியா வந்துள்ள பெல்ஜியம் மன்னர் பிலிப் நாளை ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு செல்கிறார். செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்து பேசுகிறார். புதன்கிழமை இந்தியா-பெல்ஜியம் கூட்டமைப்பில் பங்கேற்கிறார்.
அதன்பின்னர் இரண்டு நாள் பயணமாக மும்பைக்கு செல்லவுள்ளார். 2008-ல் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு சின்னத்தில் அவர் அஞ்சலி செலுத்துகிறார். அதைத்தொடர்ந்து சனிக்கிழமை பெல்ஜியம் திரும்புகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
பெல்ஜியம் நாட்டு மன்னர் பிலிப் கடந்த 2013-ல் பொறுப்பேற்றதற்கு பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.