பீர்பாட்டில் குத்து 
செய்திகள்

தவளக்குப்பத்தில் தனியார் வங்கி ஊழியருக்கு பீர்பாட்டில் குத்து- 3 பேருக்கு வலைவீச்சு

தவளக்குப்பத்தில் தனியார் வங்கி ஊழியரை பீர்பாட்டிலால் குத்திய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பாகூர்:

முதலியார்பேட்டை அனிதாநகர் காவிரி வீதி 2-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ஆரிப் முகமது (வயது 28). இவர் தனியார் வங்கி ஒன்றில் கலெக்‌ஷன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இவரும், தவளக்குப்பம் கொருக்குமேடு பகுதியை சேர்ந்த தேவபாலன் என்பவரும் நண்பர்கள்.

இதற்கிடையே தேவபாலனின் தம்பி பாலுவுக்கும், ஆரிப் முகமதுவுக்கும் பைனான்ஸ் தொழில் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தேவபாலனின் தம்பி பாலு (28) என்பவர் ஆரிப் முகமதுவை செல்போனில் தொடர்பு கொண்டு உடனடியாக தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

அதற்கு ஆரிப் முகமது காலையில் வருவதாக தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலு உடனடியாக வீட்டுக்கு வராவிட்டால் உனது வீட்டுக்கு வருவேன் என்று ஆரிப் முகமதுவை மிரட்டினார். இதுபற்றி ஆரிப் முகமது தேவபாலனிடம் கூறி பின்னர் அவரையும் அழைத்துக்கொண்டு தவளக்குப்பம் சென்றார்.

அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த பாலு மற்றும் முதலியார்பேட்டையை சேர்ந்த ஆனந்த் (20), அரியாங்குப்பத்தை சேர்ந்த சிவபாலன் ஆகியோர் ஆரிப் முகமதுவை வழிமறித்து உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.

மேலும் பீர்பாட்டிலால் குத்தினர். அதோடு கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஆரிப் முகமது புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பாலு உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.