செய்திகள்

நாகாலாந்தில் பா.ஜ.க.வின் மாட்டிறைச்சி வாக்குறுதி குறித்து மத்திய மந்திரி பதில்

நாகாலாந்தில் தேர்தலுக்கு முன்னதாக மாட்டிறைச்சி தடை செய்யப்படாது என பா.ஜ.க வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது ஆட்சியமைக்கும் சூழல் நிலவுவதால் அது தொடர்பாக மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

நாகாலாந்து சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக, நாகா மக்கள் முன்னணி கூட்டணி மற்றும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சிகள் போட்டியிட்டது. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பா.ஜ.க 11 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 27 இடங்களிலும் வென்றது. தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 16 இடங்களில் வென்றது.

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. எனினும், நாகா மக்கள் முன்னணி கட்சியும் ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், தேர்தலுக்கு முன்னதாக மாட்டிறைச்சி தடை செய்யப்படாது என பா.ஜ.க சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது அங்கு பா.ஜ.க ஆட்சியமைத்தால் மாட்டிறைச்சி உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விஷயங்களில் கை வைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மாட்டிறைச்சி என்பது இங்கு ஒரு பிரச்சனையே இல்லை. தற்போதைய நடைமுறையே தொடரும் என மத்திய உள்துறை இணைமந்திரி கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார்.