செய்திகள்

கடற்கரையில் வெளிமாநில சுற்றுலா பயணிகளை சில்மி‌ஷம் செய்த 2 வாலிபர்கள் கைது

புதுவை கடற்கரையில் அழகை ரசித்து கொண்டிருந்த வெளிமாநில சுற்றுலா பயணியை சில்மி‌ஷம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி:

அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்மைல் (வயது 19). ஓவிய கலைஞரான இவர் தனது தோழிகளுடன் புதுவைக்கு சுற்றுலா வந்தார். நேற்று மதியம் இவர் தனது தோழிகளுடன் கடற்கரை அழகை ரசித்து செல்பி எடுத்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் தங்களையும் செல்பி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தொடர்ந்து அந்த வாலிபர்கள் செல்பி எடுக்கக்கேட்டு வலியுறுத்தியதால் ஸ்மைல் அவர்களை வைத்து செல்பி எடுத்தார். அப்போது திடீரென அந்த வாலிபர்கள் ஸ்மைலிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்மைல் அலறினார். இந்த அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக ரோந்து வந்த பெரியகடை போலீசார் அந்த வாலிபர்களை விரட்டி பிடித்தனர்.

பின்னர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிவகங்கையை சேர்ந்த பாலமுருகன் (வயது 28), மற்றொரு பாலமுருகன் (24) என்பதும் இவர்கள் புதுவை மேட்டுப்பாளையத்தில் தங்கி தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கைது செய்தார்.

இதேபோல் கடற்கரை சாலையில் பெண்களை ஈவ்-டீசிங் செய்த ராஜேஷ், மீனாட்சிசுந்தரம், விக்னேஷ்குமார், ரபீக் ஆகிய 4 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT