இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுட்கால தடையை நீக்கி கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல் தலைவர் சி.கே.கண்ணா நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘தீர்ப்பு இன்று (நேற்று) தான் வந்து இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சட்ட நிபுணர்கள் குழு தீர்ப்பை படித்து பார்த்து தங்களது ஆலோசனையை தெரிவிப்பார்கள். அதனை பொதுக்குழுவில் வைத்து விவாதித்து உரிய முடிவு எடுக்கப்படும்’ என்றார்.
கேரள மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஸ்ரீசாந்துக்கு பிரச்சினை ஏற்பட்ட முதல் நாளில் இருந்தே நாங்கள் அவருக்கு ஆதரவு அளித்து வருகிறோம். அவர் நிறைய அவமானங்களை சந்தித்து விட்டார். தற்போது கேரள ஐகோர்ட்டு மகிழ்ச்சியான தீர்ப்பை அளித்துள்ளது. தற்போது அவர் சகஜ வாழ்க்கைக்கு திரும்புவார் என்று நம்புகிறோம். மீண்டும் ஸ்ரீசாந்த் கேரள அணிக்காக விளையாடுவதை பார்க்க விரும்புகிறோம்.
டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டு ஸ்ரீசாந்தை விடுதலை செய்ததும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீதான தடையை நீக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை முடிவில் பிடிவாதமாக இருந்தது. தற்போது கேரள ஐகோர்ட்டு தடையை நீக்கி உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யலாமா? என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நினைக்கக்கூடும். அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெரியாது.
இந்த சீசனுக்கான ரஞ்சி அணி தேர்வில் ஸ்ரீசாந்த் பெயர் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படுமா? என்பதற்கு தற்போது நான் கருத்து சொல்ல முடியாது. இது சங்க நிர்வாகிகள் கூடி எடுக்க வேண்டிய முடிவாகும். தேர்வாளர்களும் அவரது உடல் தகுதி குறித்து அறிந்து தான் தேர்வுக்கு அழைக்க முடியும்.
34 வயதான ஸ்ரீசாந்த் கடந்த 4 ஆண்டுகளாக விளையாடவில்லை. அவரது திறமையும், அனுபவமும் கேரள ரஞ்சி அணிக்கு மிகப்பெரிய சொத்தாகும். தற்போது எங்கள் அணியில் பாசில் தம்பி, சந்தீப் வாரியர் ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஸ்ரீசாந்த் அணிக்கு திரும்பினால் வேகப்பந்து வீச்சு மேலும் வலுப்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.