இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் ஆபரேசன்ஸ் ஜெனரல் மானேஜராக இருந்த டாக்டர் எம்.பி. ஸ்ரீதர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஜி.எம். பதவி காலியாக இருந்தது. இந்த பதவிக்கு போட்டியிட விரும்புவோம், விண்ணப்பம் செய்யலாம் என்று பிசிசிஐ கடந்த அக்டோபர் மாதம் 23-ந்தேதி வரை அவகாசம் கொடுத்திருந்தது. இந்த பதவிக்கான விண்ணப்பத்தை பிசிசிஐ தனது இணைய தளத்தில் வெளியிட்டிருந்தது.
விண்ணப்பம் செய்திருந்த விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி முடிவடைந்ததையொட்டி, முன்னாள் விக்கெட் கீப்பரான சபா கரிமை ஜெனரல் மானேஜராக பிசிசிஐ நியமித்துள்ளது. இவர் வரும் 1-ந்தேதியில் இருந்து பதவி ஏற்க இருக்கிறார்.
பிசிசிஐ-யின் செயல்பாட்டு திட்டங்களை செயல்படுத்துதல், பட்ஜெட், போட்டியை கண்காணித்தல், உள்ளூர் திட்டத்தின் நிர்வாகம் போன்ற வேலைகளை பார்ப்பார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 50 வயதாகும் சபா கரிம் இந்திய அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். மேலும் 34 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆனால், 120 முதல் தர போட்டிகளிலும், 124 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.