கொள்ளை 
செய்திகள்

வத்தலக்குண்டு அருகே அடுத்தடுத்து 2 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

வத்தலக்குண்டு அருகே அடுத்தடுத்து 2 கடைகளை உடைத்து ரூ.3 லட்சத்தை அள்ளிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு - மதுரை ரோடு ஓடைப்பாலம் அருகில் சி.எஸ்.ஐ. வணிக வளாக காம்ப்ளக்ஸ் உள்ளது. இந்த காம்ப்ளக்சில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருபவர் கார்த்திக் ராஜா. நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்து கடையை பூட்டி சென்று விட்டார்.

இன்று காலை அவரது கடையின் பூட்டு உடைந்து கிடப்பதாக அருகில் இருந்தவர்கள் அவருக்கு போன் செய்தனர். அதிர்ச்சியடைந்து கார்த்திக் ராஜா கடைக்கு வந்து பார்த்தார். கடையினுள் இருந்த ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதே போல அதே வணிக வளாகத்தில் ஹார்டு வேர்ஸ் பொருட்கள் கடை வைத்திருப்பவர் பகவான். அவரது கடையிலும் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். இந்த வணிக வளாகத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படவில்லை. இதனால் அருகில் பொருத்தப்பட்டு இருக்கும் சி.சி.டி.வி. கேமராவில் ஏதேனும் உருவங்கள் பதிவாகியுள்ளதா? என போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்தும் விசாரணை நடத்த உள்ளனர். வத்தலக்குண்டு நகரில் ஏற்கனவே நடந்த பல திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்குகளில் இது வரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

கடந்த சில நாட்களாக எந்தவித கொள்ளை, திருட்டு நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பீதியடைந்துள்ளனர்.