வத்தலக்குண்டு:
திண்டுக்கல் அருகே வத்தலக்குண்டு பெரியபள்ளிவாசல் பின்புறபகுதியை சேர்ந்த சேக்அப்துல்லா மகன் யூசுப்ரியாஜ்(வயது14), சப்தார் மகன் முகமது இஸ்திரியாஸ்(14), சாகுல் மகன் முகமதுநபில்(14), சபீர் மகன் முகமதுமீரான்(14) இவர்கள் அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பினர். பின்பு இரவு நேரத்தில் வெளியே சென்ற 4 பேரும் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சி அடைந்த மாணவர்களது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்காததால் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குபதிவு செய்து மாணவர்கள் ஏதாவது பிரச்சினையில் கோபித்துக்கொண்டு சென்றார்களா? அல்லது யாரேனும் அவர்களை கடத்திச் சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள் 4 பேர் திடீரென மாயமானது வத்தலக்குண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.