சென்னை:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின், 25 உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் கடந்த மார்ச் 28-ந் தேதி நடந்தது.
இந்த தேர்தலில் சுமார் 53 ஆயிரம் வக்கீல்கள் ஓட்டு போட்டுள்ளனர். இந்த தேர்தலை நடத்தும் அதிகாரிகளாக ஐகோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் ஜி.எம்.அக்பர்அலி, டி.மதி வாணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 25 பதவிக்கு மொத்தம் 192 வக்கீல்கள் போட்டியிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பதிவான ஓட்டுக்கள் எல்லாம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. ஓட்டுப் பெட்டிகள் ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள பார்கவுன்சில் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஓட்டுக்கள் எல்லாம் வருகிற 9ந்தேதி (திங்கட் கிழமை) எண்ணப்பட உள்ளது. இந்த ஓட்டுக்களை எப்படி எண்ண வேண்டும்? அப்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது உள்ளிட்டவை குறித்து நீதிபதிகள் அக்பர் அலி, மதிவாணன் ஆகியோர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், சட்டசபை முன்னாள் செயலாளர் ஜமாலுதீன் கலந்துக் கொண்டார். இவர், வக்புவாரிய தேர்தலை நடத்தி கொடுத்ததால், அவரது அனுபவத்தை கொண்டு, பார் கவுன்சில் தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையை மேற் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை குறித்து ஜமாலுதீன் பல விவரங்களை எடுத்துக் கூறியுள்ளார்.
இதன்படி, திங்கட்கிழமை காலை 9.25 பார்கவுன்சில் கட்டிடத்தில் உள்ள 5வது மாடியில் உள்ள அரங்கத்தில் திறக்க வேண்டும். அங்கு மாவட்ட வாரியாக ஓட்டுக்களை எண்ண வேண்டும். ஓட்டுப் பெட்டிகளுக்கு வைக்கப்பட்டுள்ள ‘சீல்’ சரியாக உள்ளது? என்பது உள்ளிட்ட விவரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. #tamilnews