கோப்புபடம் 
செய்திகள்

வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் - பல்லடம் விசைத்தறியாளர்கள் கோரிக்கை

விசைத்தறியாளர்கள் பெற்ற வங்கி கடனை தள்ளுபடி செய்து முதல்- அமைச்சர் அறிவிக்க வேண்டும் என பல்லடத்தில், விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்லடம்:

திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வேலுசாமி, செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்திற்கு வந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து விசைத்தறியாளர்கள் பெற்ற வங்கி கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை மனு அளித்துள்ளோம். அந்த மனுவில் தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. அதில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதன் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர்.

விசைத்தறி தொழிலுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அரசு விசைத்தறியாளர்களுக்கு உறுதுணையாகவே இருந்துள்ளது.

2002-ம் ஆண்டு விசைத்தறி தொழிலுக்கு ரூ.30 கோடி மின்சார சலுகை வழங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு இரு மாதங்களுக்கு ஒரு முறை 750 யூனிட் விலை இல்லாத மின்சாரம் வழங்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக ஒப்பந்த கூலி கிடைக்காமல் விசைத்தறி தொழில் நலிவடைந்த காரணத்தால் விசைத்தறியாளர்கள் வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாமல் விசைத்தறியாளர்களின் வீடு, விசைத்தறி கூடம் ஆகியவற்றை இழக்கும் நெருக்கடியில் உள்ளனர்.

இது சம்பந்தமாக விசைத்தறியாளர்கள் கோரிக்கையை ஏற்று சூலூர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் விசைத்தறியாளர்களின் துயர் துடைக்க விசைத்தறியாளர்கள் 31.3.2017-ந்தேதிக்கு முன்னர் வங்கியில் பெற்ற மூலதன கடன் ரூ.65 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தீர்கள்.

அதற்கு நன்றியை தெரிவித்து கொள்வதோடு வங்கி கடன் நிலுவைக்காக ஏலம், ஜப்தி முதலிய நெருக்கடிகள் அதிகரித்து விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே தாங்கள் அறிவித்தபடி ரூ.65 கோடி சிறு, குறு விசைத்தறியாளர்களின் மூலதன கடன்களை தள்ளுபடி செய்தால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT