புதுடெல்லி:
பல்வேறு நிறுவனங்கள், வங்கிகளில் கடன்பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.
இந்தநிலையில் வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. இன்று சிறப்பு அதிரடி சோதனையை நடத்தியது.
12 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 18 நகரங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனையை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினர்.
இதுதொடர்பாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வங்கி மோசடி தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள், கம்பெனிகள், வங்கி அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
12 மாநிலங்களில் இன்று காலை இந்த சோதனை தொடங்கியது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.