பெங்களூருவில் மவுண்ட் கார்மெல் ஆங்கில உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பள்ளியில் தற்போது 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கன்னட மொழிப்பாடத் தேர்வுக்காக தயாரித்த வினாத்தாளில், ‘சரியான விடையை தேர்வு செய்க’ எனும் தலைப்பில், அரசியல் தலைவர்களை கேலி செய்யும் வகையில் ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது.
‘விவசாயிகளின் நண்பன் யார்?
அ) மண்புழு, ஆ) முதல்வர் குமாரசாமி, இ) பாஜக தலைவர் எட்டியூரப்பா’ என அந்த கேள்வி இருந்தது.
அந்த கேள்வி இடம்பெற்றிருந்த வினாத்தாளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து முதல்வர் குமாரசாமி மற்றும் பாஜக தலைவர் எட்டியூரப்பா ஆகியோர் குறித்த மீம்ஸ்களும் வேகமாக பரப்பப்பட்டு வருகின்றன.