செய்திகள்

வங்காளதேசம்: பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் மோதல் - தலைமை நீதிபதிக்கு கட்டாய விடுப்பு

வங்காளதேசத்தில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது தொடர்பாக பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சின்ஹாவுக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அவருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

டாக்கா:

வங்காளதேச சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக சுரேந்திர குமார் சின்கா (66) பணியாற்றி வருகிறார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மீது கண்டன தீர்மானம் கொண்டு வந்து பதவி நீக்கம் செய்வதற்கு ஏதுவாக அந்நாட்டு அரசியல் சாசனத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

ஆனால், இது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்கா தலைமையிலான அமர்வு இந்த சட்ட திருத்தம் செல்லாது என அறிவித்தது. இந்த அறிவிப்பு பிரதமர் ஷேக் ஹசினா அரசுக்கு பலத்த அடியாக அமைந்தது.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து அரசில் அங்கம் வகிக்கிற பலரும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தனர். அவரை தங்கள் மனம்போன போக்கில் வார்த்தைகளால் தாக்கத் தொடங்கினர்.

அவர் பாராளுமன்றத்தின் புகழுக்கும், ஜனாதிபதிக்கும் களங்கம் விளைவித்து விட்டார், பாகிஸ்தானையும், வங்காளதேசத்தையும் அந்த தீர்ப்பில் ஒப்பிட்டது அவமதிப்பானது. அவர் பதவி விலக வேண்டும் என்று கூறி பிரதமர் ஷேக் ஹசினா தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

ஆனால், பிரதான எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சி (முன்னாள் பிரதமர் கலிதா ஜியா கட்சி), சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை விமர்சித்து, நீதித்துறையை தன் கையில் எடுத்துக்கொள்ள அரசு முயற்சிக்கிறது என்று அந்தக் கட்சி குற்றம் சாட்டியது.

இந்நிலையில், உடல் நலக்குறைவு என காரணம் காட்டி அவரை ஒரு மாத காலம் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு ஷேக் ஹசினா அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ள நிலையில், சின்ஹாவை இப்படி வலுக்கட்டாயமாக விடுமுறையில் செல்ல வைத்திருப்பது, வங்காளதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கட்டாய விடுமுறை காரணமாக அவர் நேற்று முன்தினம் இரவு ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நான்தான் நீதித்துறையின் காப்பாளன். நீதித்துறையின் நலனைக் கருத்தில் கொண்டு, அது காயப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தற்காலிகமாக விடைபெற்று செல்கிறேன். நான் திரும்ப வருவேன்.

எனது ஜூலை மாத தீர்ப்பால் எழுந்துள்ள சர்ச்சை, தர்ம சங்கடத்துக்கு என்னை ஆளாக்கி உள்ளது. அரசு கூறுவது போல என் உடல்நலத்தில் பிரச்சினை இல்லை.

நான் அளித்த தீர்ப்பு, அரசால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. இதனால் பிரதமர் ஷேக் ஹசினா கவலை அடைந்துள்ளார். ஆனால் அவர் விரைவில் உண்மையை உணர்வார்.

நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் எங்கும் ஓட்டம் பிடித்து விடவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர் எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.  அதில் அவர், நீதித்துறையின் சுதந்திரத்தை எண்ணி தான் கவலை கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.