செய்திகள்

டெஸ்டில் 1974-க்குப் பிறகு குறைந்த ஸ்கோரை பதிவு செய்த வங்காள தேசம்

43 ரன்னில் சுருண்டதன் மூலம் 1974-க்குப் பிறகு குறைவான ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனைக்கு தள்ளப்பட்டது வங்காள தேசம். #WIvBAN

மாலை மலர்

தொடக்க ஓவரை கேமர் ரோச் வீசினார். மறுமுனையில் கேப்ரியல் வீசினார். முதல் நான்கு ஓவரை வங்காள தேச அணி தாக்குப்பிடித்து விளையாடியது. 5-வது ஓவரை ரோச் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் தமிம் இக்பால் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வங்காள தேச அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது.

அதன்பிறகு வங்காள தேச பேட்ஸ்மேன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறிக் கொண்டிருந்தனர். இதனால் வங்காள தேசம் 18.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 43 ரன்னில் சுருண்டது.

இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றில் 1974-ம் ஆண்டிற்குப்பிறகு சுமார் 44 வருடத்தில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற மோசமாக சாதனையை வங்காள தேசம் படைத்துள்ளது. அத்துடன் வங்காள தேச அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் என்பதையும் பதிவு செய்துள்ளது. இதற்கு முன் வங்காள தேச அணி இலங்கைக்கு எதிராக 2007-ல் 62 ரன்னில் சுருண்டிருந்தது. அதுவே மிகக்குறைந்த ஸ்கோராக இருந்தது. தற்போது இது குறைந்த ஸ்கோராக அமைந்துள்ளது.

1974-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்திற்கு எதிராக 42 ரன்னில் சுருண்டதே மிகக்குறைந்த ஸ்கோராக இருந்தது. அதன்பின் தற்போது வங்காள தேசம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து 1955-ம் ஆண்டும் 26 ரன்னில் சுருண்டதே குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும். அதன்பின் தென்ஆப்பிர்க்கா இங்கிலாந்திற்கு எதிராக 30 ரன்னில் இரண்டு முறையும், 35 ரன்னில் ஒரு முறையும் ஆல்அவுட் ஆகியுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 1932-ல் 36 ரன்னில் சுருண்டுள்ளது.