திண்டுக்கல்:
திண்டுக்கல் நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான பெரிய மற்றும் சிறிய ஓட்டல்கள் உள்ளன. இவை தவிர 500-க்கும் மேற்பட்ட ரோட்டோர கடைகளும் காணப்படுகிறது. இவற்றில் பிரியாணி, அசைவ, சைவ உணவு வகைகள் பறிமாறப்படுகிறது. காலை, நன்பகல், இரவு என 3 வேளைகளில் சாப்பாடு வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான வியாபாரிகளும் வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் தங்களது தேவைக்காக பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். அவ்வாறு வரும் மக்கள் ஓட்டல்களுக்கு செல்லும் போது சில ஓட்டல்களில் வாழை இலைகளை கண்கூடாக பார்க்க முடியவில்லை. வாழை இலைகளுக்கு பதில் பிளாஸ்டிக் பேப்பர் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இவை தவிர சட்னி, சாம்பார், சால்னா போன்ற வைகளை பிளாஸ்டிக் பைகளில் பொட்டலமாக போட்டு வழங்குகின்றனர். சில ஓட்டல்களில் சுத்தப்படுத்தப்படாத மேஜைகள், கழுவப்படாத தண்ணீர் டம்ளர்கள், தூசிகளுடன் காணப்படும் குடிநீர் தொட்டிகள் போன்றவைகளுடன் சுகாதாரமின்றி காணப்படுகிறது.
எனவே இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இவர்கள் இது பற்றி கண்டுகொள்வதே இல்லை. சில ஓட்டல் உரிமையாளர்கள் அவ்வப்போது அதிகாரிகளை கவனிப்பதால் இதனை அவர்கள் ஏறெடுத்து பார்ப்பது கிடையாது.
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கடும் வறட்சி நீடிக்கிறது. இதனால் வாழை சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. வாழை இலை தட்டுப்பாட்டால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு இலை 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவேதான் ஓட்டல்களில் பேப்பர் பயன்பாடு அதிகரித்துள்ளது என்றார்.