செய்திகள்

பந்தை சேதப்படுத்திய விவகாரம்- ஸ்டீவன் ஸ்மித் கண்ணீர் மல்க பேட்டி

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் வருத்தம் தெரிவித்து கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். #stevensmith #BallTampering

மாலை மலர்

'தென் ஆப்பிரிக்காவுடனான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது வீடியோவில் தெளிவாக தெரிந்தது. பந்தை சேதப்படுத்தியதை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, பந்தை சேதப்படுத்திய புகார் தொடர்பாக ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. மேலும், பந்தை சேதப்படுத்திய பான்கிராப்டுக்கு 9 மாதம் விளையாடவும் தடை விதித்துள்ளது. மேலும், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் ஐ.பி.எல். 2018 போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு வருத்தம் தெரிவித்து சிட்னியில் ஸ்டீவன் ஸ்மித் கண்ணீர் மல்க பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பந்தை சேதப்படுத்திய விவாகாரத்திற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒரு கேப்டனாக தோற்று விட்டேன். நான் செய்த தவறால் ஏற்பட்ட பாதிப்பை கண்டிப்பாக சரி செய்வேன்.


 
செய்த தவறுக்கான தண்டனையை வாழ்நாள் முழுவதும் அனுபவிப்பேன். இந்த விவகாரத்தினால் நான் இழந்த மரியாதையை திரும்ப பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. உலகிலேயே கிரிக்கெட் மிகச் சிறந்த விளையாட்டு. கிரிக்கெட் எனது வாழ்க்கை. என் வாழ்க்கையை நான் திரும்ப பெறுவேன். என்னை மன்னித்து விடுங்கள். நான் அனைத்தையும் வீணாக்கிவிட்டேன்.

இந்த விவகாரத்தில் யார் மீதும் பழி போட விரும்பவில்லை. ஒரு கேப்டனாக அனைத்து தவறும் என் மேல் தான் உள்ளது. கிரிக்கெட் மீது நான் அளவுக்கடந்த அன்பு வைத்திருக்கிறேன். நான் விளையாட்டின் மூலம் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறேன். ஆஸ்திரேலியாவிற்கு ஏற்பட்ட வலிக்காக ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடன் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்'.

என கண்ணீர் மல்க பேட்டியளித்தார். பேசமுடியாமல் கதறி அழுத ஸ்மித்தை அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தினர். அவரின் பேட்டி பார்ப்பவர்களை கண் கலங்க வைத்தது. #stevensmith #BallTampering