திண்டுக்கல்:
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் கோபிநாத், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் கண்ணையன் ஆகியோர் பேசினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜாக்டோ ஜியோ சார்பில் நடந்த போராட்டத்தின் போது ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும். இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது குறித்து சென்னையில் வருகிற 7-ந் தேதி மாநில செயற்குழுவை கூட்டி முடிவு செய்யப்படும்.
கடந்த 2½ ஆண்டுகளாக அரசு பணியாளர் சங்கம் வைத்த எந்த கோரிக்கை மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி நாளை (4-ந் தேதி) மதுரை, கோவை, சேலம், திருச்சி, சென்னை ஆகிய 5 மண்டலங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள் முன்பு 5 விதமான கலர் சட்டைகள் அணிந்து போராட்டம் நடத்தப்படும்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் அரசியல் தலையீடு இல்லை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு காரணம் தனியார் குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் இலவசமாக கொடுப்பதுதான். எனவே தண்ணீர் வழங்குவதில் தனியார் மையத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.