புதுவை சட்டமன்றத்தில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இதையடுத்து, துணை சபாநாயகராக இருந்த சிவகொழுந்து சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஜூன் 2-ந்தேதி சபாநாயகராக சிவகொழுந்து பதவியேற்றார்.
இதனால் துணை சபாநாயகர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து துணை சபாநாயகர் தேர்தல் செப்டம்பர் 5-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. உழவர்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலன் துணை சபாநாயகர் பதவிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சி தரப்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் பாலன் துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கான அறிவிப்பை சட்டசபையில் இன்று சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். தேர்வு செய்யப்பட்ட பாலன் துணை சபாநாயகராக பதவியேற்றார். சபாநாயகர் தனது இருக்கையில் இருந்து எழுந்து, பாலனை அந்த இருக்கையில் அமர வைத்து அவையை நடத்தும்படி தெரிவித்தார்.
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர், புதிய துணை சபாநாயகர் பாலனை இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.