முதல்வர் எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

குரானின் போதனையை ஏற்று ஒற்றுமையாக வாழ வேண்டும் - எடப்பாடி பழனிசாமி பக்ரீத் வாழ்த்து

குரானின் போதனையை ஏற்று ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தியாகத்தைப் போற்றும் புனித திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடும் எனது அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைக் கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்கு அர்ப்பணிக்க துணிந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் இறை உணர்வையும், தியாகத்தையும் நினைவு கூரும் வகையில் பக்ரீத் திருநாள் இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.

இத்திருநாளில், “எவர் ஒருவர் இறை அச்சம் கொள்கின்றார்களோ, மேலும், நன்னடத்தை மேற் கொள்கின்றார்களோ, அத்தகையவர்களுடன் இறைவன் இருக்கின்றான்” என்ற திருக்குரானின் போதனையை மக்கள் மனதில் நிறுத்தி, உலகில் அன்பும், அமைதியும், மனிதநேயமும் தழைத் தோங்கிட அனைவரும் நல்லொழுக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.