கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி, மும்பையில் பல்வேறு இடங்களில் லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 166 பேர் பலியானார்கள். 240 பேர் காயமடைந்தனர். லஸ்கர் இ தொய்பாவுடன் சேர்ந்து இத்தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர், கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியரான தஹாவூர் ராணா ஆவார். கொலை, கொலைச்சதி, மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக அவர் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அவர் சார்பில் லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனு, 30-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அமெரிக்க அரசு தரப்பில் 26-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, அமெரிக்க அரசு வக்கீல் ஜான் லுலேஜியன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-தஹாவூர் ராணா, இந்தியாவால் தேடப்படுபவர். அவரை ஜாமீனில் விடுதலை செய்து, கனடா செல்ல அனுமதித்தால், அவர் மீண்டும் கோர்ட்டுக்கு வர மாட்டார். எனவே, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு முடிவடையும்வரை, ஜாமீன் அளிக்கக்கூடாது.