மரணம் 
செய்திகள்

பாகூரில் வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்

பாகூரில் வீட்டில் உடல் அழுகிய நிலையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.

மாலை மலர்

பாகூர்:

பாகூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம்(வயது 37). போட்டோ கிராபராக வேலை செய்து வந்தார். இவருக்கு சுகந்தி (28) என்ற மனைவியும், 2 ஆண்குழந்தைகளும் உள்ளனர்.

இதற்கிடையே கணவன் -மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சண்முகசுந்தரத்தை விட்டு பிரிந்து அவரது மனைவி சுகந்தி தனது குழந்தைகளுடன் கடந்த ஒரு வருடமாக தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

மனைவி பிரிந்து சென்றதால் சண்முகசுந்தரம் குடிப்பழக்கத்துக்கு ஆளானார். தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி சண்முகசுந்தரம் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அதன்பிறகு அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.

இந்த நிலையில் சண்முக சுந்தரம் வசித்த வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த வீட்டின் கீழ்தளத்தில் வாடகைக்கு குடியிருக்கும் நாகம்மாள் (72) என்பவர் அதே பகுதியில் வசிக்கும் சண்முகசுந்தரத்தின் உறவினர் ஆனந்தனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து ஆனந்தன் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோத சண்முகசுந்தரம் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து சண்முகசுந்தரம் குடிபோதையில் சுவரில் தலை மோதி இறந்து போனாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.