வாஷிங்டன்:
அமெரிக்காவையே அலற வைத்தவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபுபக்கர் அல் பாக்தாதி (வயது 48). அதனால்தான் அவரை கொல்ல வேண்டும் அல்லது உயிரோடு பிடிக்க வேண்டும் என்று அமெரிக்கா குறி வைத்தது.
அவர் சிரியாவில் இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் ஒரு வளாகத்தில் பதுங்கி இருப்பதை துப்பு அறிந்து கடந்த 26-ந் தேதி அமெரிக்க சிறப்பு படை சுற்றி வளைத்தது. தப்பிக்க ஒரு வழியும் இல்லை என்ற நிலையில் தன் உடலில் கட்டி வைத்திருந்த குண்டுகளை வெடிக்க வைத்து பாக்தாதி பலியானார்.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோவை முதல்முறையாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் வெளியிட்டுள்ளது. பாக்தாதி பதுங்கி இருந்த வளாகத்தில் இருந்த பயங்கரவாதிகளை நோக்கி அமெரிக்க படைவீரர்கள் துப்பாக்கியால் சுடும் காட்சி வீடியோவில் உள்ளது. அமெரிக்க படையின் தாக்குதலால் நிலை குலைந்து போன பாக்தாதி, அந்த வளாகத்தில் உள்ள குகைப்பாதைக்குள் ஓட, அமெரிக்க படையில் இடம் பெற்றுள்ள நாய் துரத்த, அதன்பின்னர்தான் பாக்தாதி தனக்கு தானே முடிவை தேடி கொண்டார்.
அமெரிக்க படை நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து அந்த வளாகம் பெரிய பள்ளங்களுடன் வாகனங்கள் நிறுத்துமிடம் போல காட்சி அளிப்பதையும் வீடியோ காட்டுகிறது. இதுபற்றி அமெரிக்க மத்திய ராணுவ தளபதி ஜெனரல் கென்னத் மெக்கென்சி நிருபர்களிடம் பேசுகையில், பாக்தாதியுடன் குகையில் 3 குழந்தைகள் பலியானதாக வந்த தகவல் சரியானதல்ல, 2 குழந்தைகள் பலியாகி இருக்கின்றன என கூறினார்.
அந்த வளாகத்தில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருந்த ‘பெல்ட்’ அணிந்திருந்த 4 பெண்கள், ஒரு ஆண் ஆகியோரும் பலியாகினர் என்றார்.
பாக்தாதி உயிர்ப்பலியால், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பழிவாங்கும் வகையில் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.