செய்திகள்

பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் - சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், பிரனோய் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்றுவரும் பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், பிரனோய் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #BAC2018 #PVSindhu #SainaNehwal #KidambiSrikanth #HSPrannoy

மாலை மலர்

பீஜிங்:

பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் வூஹான் நகரில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. 29-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் இந்தியா சார்பில் பிவி சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், எச்எஸ் பிரனோய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், சீனாவின் பாங்ஜியே காவோவை எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சாய்னா, 21-18, 21-8 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பிவி சிந்து, சீனாவின் சையோக்சின் சென்-ஐ எதிர்கொண்டார். இதில் 21-12, 21-15 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சிந்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் ஆண்கள் பிரிவிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்எஸ் பிரனோய், சீன தைபே வீரர் சூ வெய் வாங்குடன் 16-21, 21-14, 21-12 என போராடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆண்கள் முதல் சுற்று ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் விங் கி வின்செண்ட் வோங் உடன் மோதினார். இந்த போட்டியின் போது வின்செண்ட்க்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.

மற்றொரு ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத், 12-21, 12-21 என்ற நேர் செட்களில் சீனாவின் லாங் சென்னிடம் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறினார். #BAC2018 #PVSindhu #SainaNehwal #KidambiSrikanth #HSPrannoy