ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி பதிலடி கெடுத்து புனே அணி 3-வது இடத்துக்கு முன்னேறியது.
ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்னே எடுக்க முடிந்தது.
மனிஷ் பாண்டே 32 பந்தில் 37 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) கிராண்ட்ஹோம் 19 பந்தில் 36 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் 16 பந்தில் 30 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
ஜெய்தேவ் உனன்கட் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், ஸ்டோக்ஸ், இம்ரான் தாகீர், கிறிஸ்டியன் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ராகுல் திரிபாதியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 52 பந்தில் 93 ரன் எடுத்து அணியை வெற்றி பெற செய்ய வைத்தார். இதில் 9 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும்.
புனே அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. மேலும் கொல்கத்தாவிடம் ஏற்கனவே தோற்றதற்கும் அந்த அணி பழிதீர்த்து கொண்டது. வெற்றி குறித்து புனே அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறியதாவது:-
கொல்கத்தாவை 155 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது பாராட்டுதலுக்குரியது. வீரர்களின் கூட்டு முயற்சி சிறப்பாக இருந்தது. மிடில் ஓவரில் ஆடுகளம் தன்மையில் மாற்றம் இருந்தது. திரிபாதி மிகவும் அதிரடியாக விளையாடினார். எங்கள் அனைவரின் வெளிப்பாடாக அவர் இருந்தார். அவர் சதம் அடிக்க இயலாமல் போனது துரதிருஷ்டமே. சதம் அடிக்க திரிபாதி தகுதியானவர். இது நிலையான ஆட்டம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதன்மூலம் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி 4-வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் காம்பீர் கூறியதாவது:-
நீண்ட நாட்கள் நடைபெறும் இந்தபோட்டி தொடரில் இது மாதிரி தோல்வி நிகழத்தான் செய்யும் மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. காயம் கருதி உத்தப்பா ஆடவில்லை. இந்த நிமிடம் வரை நாங்கள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழையவில்லை. இன்னும் 3 ஆட்டங்கள் இருக்கிறது. இதில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்று ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுவோம்.
நாங்கள் சிறப்பாவே ஆடினோம். கடைசி ஓவரில் தான் தோற்றோம். கடந்த போட்டியில் வார்னரும், இறுதிப்போட்டியில் திரிபாதியும் அதிரடியாக ஆடி எங்களது வெற்றியை பரித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.