புதுடெல்லி:
இந்திய தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் (பிக்கி) 90-வது ஆண்டு பொதுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசுகையில், ‘காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி கடன் வழங்குவதற்கு வங்கிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டன. இதற்காக மக்களின் பணம் சுரண்டப்பட்டுள்ளது. இது காமன்வெல்த் விளையாட்டு, 2ஜி மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்களை விட மிகப்பெரிய ஊழல் ஆகும்.
எங்கள் அரசாங்கம் வணிகங்களின் தேவை மற்றும் வழக்கற்ற பழைய மற்றும் வழக்கற்றுப்போன சட்டங்களை அகற்றுவதை மனதில் கொண்டு கொள்கைகளை உருவாக்குகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் பாதுகாப்பு, நிதித்துறை மற்றும் உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 87 முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்றார்.
மேலும், தனது ஆட்சியில் செயல்படுத்தப்படும் பெண்களுக்கான இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், அனைத்து குடும்பத்தினருக்கும் வங்கி கணக்குகள், இளைஞர்கள் மற்றும் மலிவு விலையில் வீடுகள் கட்டுவதற்கும் கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் மோடி பட்டியலிட்டார்.