பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள நரிக்கல்பதி கிராமத்தை சேர்ந்தவர் பாலன் (40) கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி (30).
இவர்களுக்கு நித்தின் (6), பிரசாந்த் (3) என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தேவி 3-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் கடந்த 29-ந்தேதி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.
அன்று இரவு 10 மணிக்கு தேவிக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தேவிக்கு உதவியாக அவரது கணவர் பாலன் மட்டும் இருந்து வந்தார்.
இதனை அறிந்த பெண் ஒருவர் தேவிக்கு உதவி செய்வதாக கூறினார். தனது அண்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு உதவி செய்ய வந்து இருப்பதாகவும் இரவு நேரத்தில் தான் குழந்தையை பார்த்து கொள்வதாக தெரிவித்தார்.
இதற்கு தேவி சம்மதம் தெரிவித்தார். அவரை தனது மகள் போல் பார்த்து கொண்டார். தேவிக்கு சாப்பாடு ஊட்டி விட்டு குழந்தையையும் கொஞ்சி குலாவினார்.
இது தேவிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தேவி நேற்று மதியம் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அவர் குழந்தையுடன் வீட்டுக்கு புறப்பட தயாரானார். தேவியுடன் அவரது கணவரும் வந்து இருந்தார். அப்போது நீங்கள் டாக்டரை பார்த்து விட்டு வாருங்கள். நான் குழந்தையை பார்த்து கொள்கிறேன் என அப்பெண் கூறினார்.
உடனே தேவியும், அவரது கணவர் பாலனும் டாக்டரை பார்க்க சென்றனர். திரும்பி வந்து பார்த்து போது அப்பெண் குழந்தையுடன் மாயமானது தெரிய வந்தது.
இதனால் பதறி துடித்த பாலனும், தேவியும் ஆஸ்பத்திரி முழுவதும் தேடினார்கள். ஆனால் அப்பெண்ணை கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் அங்கு விரைந்து வந்து ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கைக்குழந்தையுடன் ஒரு பெண் ஆட்டோவில் செல்வது தெரிய வந்தது.
ஆட்டோவில் செல்போன் எண் எழுதப்பட்டு இருந்ததை பார்த்த போலீசார் அந்த ஆட்டோ டிரைவரை தொடர்பு கொண்டு கேட்ட போது தனது பெயர் ஜெயக்குமார் என்றும் தான் அந்த பெண்ணை பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு சென்று விட்டதாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து குழந்தையை கடத்திய பெண்ணை பிடிக்க பொள்ளாச்சி டி.எஸ்.பி. சிவக்குமார், இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திர பிரசாத், பரமேஸ்வரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலை பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தையை கடத்தி சென்ற பெண் உடுமலை அருகே உள்ள குறிச்சி கோட்டையில் இருப்பது தெரிய வந்தது.
அங்கு சென்ற போலீசார் அப்பெண்ணை கைது செய்தனர். குழந்தையையும் மீட்டனர். கைதான பெண் மாரியம்மாள் (34) என்பது தெரிய வந்தது. அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது-
எனது கணவர் லிங்கசாமி. சிறு, சிறு காண்டிராக்ட் எடுத்து நடத்தி வருகிறார். எங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் தான் கர்ப்பம் அடைந்தேன். பிரசவத்துக்காக கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றேன்.
அங்கு குறை பிரசவத்தில் ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதனை எனது கணவரிடம் மறைத்து விட்டேன். அவர் ஆண் குழந்தை உயிருடன் இருப்பதாகவே கருதினார். மேலும் எனக்கு குழந்தை இல்லா ஏக்கம் இருந்தது. கணவரிடம் எப்படியாவது குழந்தையை காண்பிக்க வேண்டும் என கருதினேன். அதற்கு ஆண் குழந்தையை கடத்தி செல்வது தான் ஒரே வழி என நினைத்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அங்கு யாருக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது என நோட்டமிட்டேன். அப்போது தான் தேவிக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பது தெரிய வந்தது. அவருக்கு கணவரை தவிர வேறு யாரும் உதவி செய்யவில்லை என்பதை அறிந்தேன்.
தேவிக்கு உதவி செய்வது போல் நடித்து குழந்தையை கடத்தி சென்றேன்.
குழந்தையை வேறு எங்கும் கொண்டு செல்லாமல் எனது வீட்டிலே வைத்து இருந்தேன். என்னை போலீசார் கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனாலும் மாரியம்மாளுக்கும் குழந்தை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
மீட்கப்பட்ட குழந்தை அதன் பெற்றோரான பாலன், தேவியிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தை கடத்தப்பட்டு 10 மணி நேரத்தில் அதனை கடத்திய பெண்ணை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் பாராட்டினார்.