மத்திய பொது பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், ஆந்திராவை மத்திய அரசு புறக்கணித்துவிட்டதாகவும் அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாராளுமன்றத்தில் இது தொடர்பாக ஆந்திர மாநில எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பாராளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஜெயதேவ் கல்லா செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு 1800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்தின் வசூல்கூட இதைவிட அதிகம். ஒரு திரைப்படத்தின் வசூலை விட நாங்கள் குறைவான நிதியை பெற்றுள்ளோம். கூட்டணி கட்சிகளை அவர்கள் இப்படி நடத்தினால், எதிர்காலத்தில் கூட்டணியில் இருந்து பலர் விலகவே விரும்புவார்கள்’ என்றார்.
பின்னர் மக்களவை கூடியதும் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்குதேசம் கட்சி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பட்ஜெட்டைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். ஆந்திராவுக்கு நீதி வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
அதன்பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போதும் ஆந்திர எம்.பி.க்கள் பட்ஜெட்டுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அவர்களை பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி ஆனந்த் குமார் சமாதானப்படுத்தினார். விவாதத்திற்கு பதிலளித்து நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பேசும்போது, ஆந்திர விவகாரம் குறித்து பேசுவார் என ஆனந்த் குமார் குறிப்பிட்டார். எனவே, ஆந்திராவுக்கான புதிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews