செய்திகள்

விப்ரோ நிறுவன தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் அசிம் பிரேம்ஜி

இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி ஜூலை மாத இறுதியில் ஓய்வுபெறப் போவதாக தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

விப்ரோ நிறுவனத்தைத் தொடங்கி 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக வழிநடத்திவருபவர் அசிம் பிரேம்ஜி. விப்ரோ நிறுவனத்தில் கடந்த 1960ஆம் ஆண்டுகளில் இருந்து பணியாற்றி வரும் அசிம் பிரேம்ஜி, தனது நிறுவனத்தை பல லட்சம் கோடி மதிப்புள்ள மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக உருவாக்கியுள்ளார்.

பெரும் கொடையாளியான அசிம் பிரேம்ஜி விப்ரோ நிறுவனத்தில் தனக்கு சொந்தமான பெரும்பாலான சொத்துக்களை தனது பெயரில் உள்ள அறக்கட்டளைக்கு அளித்துவிட்டார். இன்றைய தேதியில், உலக அளவில் பில்கேட்ஸுக்கு அடுத்தபடியாக 27 பில்லியன் டாலரைத் தானமாகத் தந்திருக்கிறார் அசிம் பிரேம்ஜி.

இந்நிலையில், 74-வது வயதான அசிம் பிரேம்ஜி, ஜூலை மாதத்தோடு தனது பணியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். அவரது ஓய்வுக்குப்பின்னர், ஜூலை 31-ம் 2019 முதல் அவரின் மகன் ரிஷத் பிரேம்ஜி, விப்ரோ நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார். நிறுவனத் தலைவர் பொறுப்பிலிருந்து அசிம் பிரேம்ஜி பதவி விலகினாலும், விப்ரோவின் நிறுவனராகவும், நிர்வாகக் குழுவின் இயக்குநர்களில் ஒருவராகவும் செயல்படுவார் எனக் கூறப்படுகிறது.

அசிம் பிரேம்ஜி பதவி விலகல் குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, விப்ரோ நிறுவன பங்குகளில் லேசான சரிவு ஏற்பட்டது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையில் விப்ரோவின் பங்குகளின் விலை 0.65 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.