செய்திகள்

அழகர்கோவில், சோலைமலை முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.

அழகர்மலை உச்சியில் உள்ள நூபுர கங்கையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர். இதே போல் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும், வித்தக விநாயகர் மற்றும் ஆதி வேல் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடந்தது.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவில் மற்றும் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சோலைமலை முருகன் கோவிலில் ஆடி மாத கார்த்திகை விழா வருகிற 28–ம்தேதி, (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், தீபாரதனையும் நடைபெறும்.

தொடர்ந்து அன்று பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்துவார்கள். பின்னர் மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடைபெறும். பக்தர்களுக்கு உணவு வழங்கப்படும்.

மேலும் உற்சவர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். ஆடி கார்த்திகையில் மலையேறி வந்து ஆறுமுகப் பெருமானுக்கு விளக்கேற்றி தரிசனம் செய்தால் அனைத்து நன்மைகளும் கூடி வரும் என்பது பக்தர்களின் ஐதீகமாகும்.