லக்னோ:
சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் மந்திரியுமான முகமத் அசாம் கான் குறித்து பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா கருத்து ஒன்றை தெரிவித்தார். ‘பத்மாவதி படத்தில் வரும் வில்லன் அலாவுதீன் கில்ஜியை பார்க்கும் போது எனக்கு அசாம் கான் நினைவு வருகிறது. அவர், லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட்ட போது என்னை கொடுமை செய்தார். அதனால் எனக்கு அவ்வாறு தோன்றுகிறது’ என ஜெயப்பிரதா கூறினார். அவரின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அசாம் கான் நேற்று மோராபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெயப்பிரதாவின் கருத்திற்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், 'பத்மாவதி படத்தில் அலாவுதீன் கில்ஜியின் கதாபாத்திரம் மிகவும் மோசமானது. அவர் வருவதற்கு முன்பே அந்த படத்தின் கதாநாயாகி பத்மாவதி இறந்து விடுவார். ஆனால், அந்த மோசமான கதாப்பாத்திரத்தை என்னுடன் ஒரு பெண் ஒப்பிட்டுள்ளார். இது போன்ற கூத்தாடிகளின் விமர்சனங்களுக்கு நான் பதிலளித்து கொண்டிருந்தால், அரசியலில் நான் எப்படி கவனத்துடன் செயல்படுவது' என ஜெயபிரதாவை கடுமையாக தாக்கி பேசினார். இது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஜெயப்பிரதா சமாஜ்வாடி கட்சியில் இணைந்து இரண்டு முறை (2004-2009 மற்றும் 2009-2014) ராம்பூர் தொகுதியின் எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவதற்கு அசாம் கான் மிக உதவியாக இருந்தார். ஆனால், அமர்சிங்கின் ஆதரவாளராக ஜெயப்பிரதா மாறினார். #Azamkhan #JayaPrada #tamilnews