பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கிய அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள். 
செய்திகள்

பிரதமர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு- அய்யாக்கண்ணு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என அய்யாகண்ணு தெரிவித்தார்.

மாலை மலர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். நதிகளை இணைத்து நீர் வழி சாலை அமைக்க வேண்டும். தடுப்பணைகள் அமைத்து காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1-ந் தேதி முதல் விவசாயிகள் விழிப்புணர்வு நடைபயணம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு தலைமையில் பல்வேறு ஊர்களில் நடைபெற்று வருகிறது. இன்று திண்டுக்கல் வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் மத்திய மாநில அரசுக்கு எதிரானவன் அல்ல. விவசாயிகளின் நலனுக்காகவே பாடுபடுகிறேன். ஆனால் தொடர்ந்து மத்திய-மாநில அரசுகள் விவசாயிகளை புறக்கணித்து வருகிறது. டெல்லியில் போராட்டம் நடத்திய போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களை சந்தித்து வாக்குறுதி அளித்தார். ஆனால் அதில் எதையும் நிறைவேற்றவில்லை. நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளை மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாமலேயே உள்ளது.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். மேலும் அவரது வீட்டை முற்றுகையிட்டு விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடத்துவோம்.