செய்திகள்

நதிகளை இணைப்பதற்கு ரஜினி ரூ.5 கோடி வழங்க வேண்டும்: அய்யாக்கண்ணு பேட்டி

நதிகளை இணைக்க பிரதமரிடம் ரஜினிகாந்த் ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என்று அய்யாக்கண்ணு பேசினார்.

விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே சாத்துக்கூடல் கிராமத்தில் தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு மாநில செயலாளர் சாத்துக்கூடல் சக்திவேல் தலைமை தாங்கினார். பாலசுப்பிரமணியன், குமரகுரு, ராமகிருஷ்ணன், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக கூறுகிறார். அவர் நதிகளை இணைக்க ரூ.ஒரு கோடி கொடுப்பேன் என்று முன்பு வாக்குறுதி அளித்திருந்தார். அந்த தொகையை அப்போது அவர் வங்கியில் போட்டு இருந்தால் வட்டியோடு சேர்த்து தற்போது ரூ. 5 கோடியாக உயர்ந்து இருக்கும். எனவே அவர் தற்போது நதிகளை இணைக்க பிரதமரிடம் ரூ.5 கோடி கொடுத்து நதிகளை இணைக்க பிள்ளையார் சுழி போட வேண்டும்.

தமிழக அரசு அறிவித்துள்ள கரும்புக்கான ஆதார விலையை தனியார் சர்க்கரை ஆலைகள் கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்கவில்லை. அதனை பெற்று தர தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து 10 ஆயிரம் விவசாயிகளை ஒன்று திரட்டி சென்னையில் போராட்டம் நடத்த உள்ளோம்.

நெல்லுக்கான ஆதார விலையை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இந்த தொகை யானை பசிக்கு சோளப்பொறி கொடுத்த கதைபோல் உள்ளது. எனவே நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும். மொத்தம் ரூ.1,950 கோடிதான் விவசாயிகளுக்கு கடன் உள்ளது. இந்த கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #ayyakannu #rajinikanth

SCROLL FOR NEXT