செய்திகள்

மத்திய அரசு விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டுகிறது- அய்யாக்கண்ணு குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலதாமதம் செய்வதால் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டுவதாக உள்ளது என அய்யாக்கண்ணு குற்றம் சாட்டியுள்ளார். #Ayyakannu #Centralgovernment #cauveryissue

மாலை மலர்

தஞ்சாவூர்:

தென்னிந்திய நதிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலதாமதம் செய்வதால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வாழ்வதா? சாவதா? என்ற நிலையில் போராடி வருகின்றனர்.

ஏற்கனவே வறட்சியால் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கேட்டுள்ளது. இது விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் செயலாக உள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் வணிகர் சங்கங்கள் சார்பில் வருகிற 3-ந்தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. அதே நாளில் விவசாய சங்கங்களின் சார்பில் ரெயில் மறியல், சாலை மறியல், விமான நிலையங்கள் முற்றுகை உள்பட பல போராட்டங்களை நடத்த உள்ளோம்.

இந்த போராட்டங்களுக்கு அனைத்து கட்சியினரும், அனைத்து விவசாய சங்கத்தினரும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வட நாட்டில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு தமிழகத்துக்கு மாற்றி உள்ளது. இதன் மூலம் வட மாநில மக்கள் வாழ வேண்டும். தென் மாநில மக்கள் சாக வேண்டும் என்பது போல் மத்திய அரசின் நடவடிக்கை உள்ளது.

தமிழகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைந்தால் பயிர்களில் மரபணு மாற்ற திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #Ayyakannu #Centralgovernment #cauveryissue